கிரிக்கெட்

ஜெய்ஸ்வால், யஷ் ரத்தோட் சதம்: நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் டிரா

இரு அணிகளும் ஆட்டத்தை முடித்துக்கொள்ள ஒப்புக்கொண்டன.

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இளம் வீரர் யஷ் ரத்தோட் ஆகியோர் அபாரமாக விளையாடி சதமடித்தனர். இதனால் இந்திய ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையை எட்டியதுடன், நான்கு நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் கடைசி நாளில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்திருந்தபோது இரு அணிகளும் ஆட்டத்தை முடித்துக்கொள்ள ஒப்புக்கொண்டன.

முதல் இன்னிங்ஸில் துருவ் ஜுரேலின் சதம்!

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய ஏ அணிக்கு தொடக்கத்தில் சாய் சுதர்ஷன் 41 ரன்களும், தேவ்தத் படிக்கல் 80 ரன்களும் எடுத்து நல்ல பங்களிப்பை வழங்கினர். இருப்பினும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் இந்திய அணி ஒரு கட்டத்தில் 160 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அப்போது கேப்டன் துருவ் ஜுரேல் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். நிதானமாகவும் அதேசமயம் நேர்த்தியாகவும் பேட்டிங் செய்த அவர் 171 பந்துகளில் 105 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஆகாஷ் தீப் 68 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 346 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து ஏ அணியின் சார்பில் ஃப்ரேசர் ஷீட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேத்யூ பாயில், டீன் பாக்ஸ்கிராப்ட் அதிரடி சதம்!

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து ஏ அணி ஆரம்பத்தில் 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மேத்யூ பாயில் மற்றும் டீன் பாக்ஸ்கிராப்ட் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருவரும் இணைந்து 208 ரன்கள் சேர்த்து அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர். சிறப்பாக விளையாடிய மேத்யூ பாயில் 152 பந்துகளில் 110 ரன்கள் அடித்து சதமடித்தார். டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் 226 பந்துகளை எதிர்கொண்டு 93 ரன்கள் எடுத்தார். இதனால் நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்ஸில் 424 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் முகேஷ் குமார் 87 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 118 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் நியூசிலாந்து ஏ அணி 78 ரன்கள் முன்னிலை பெற்றது.

கடைசி நாளில் ஜெய்ஸ்வால், ரத்தோட் அபார ஆட்டம்!

78 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய ஏ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கடைசி நாளில் மழை மற்றும் சாரல் காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் நியூசிலாந்து ஏ அணியின் பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சாய் சுதர்ஷன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே போல்டானார். இதனால் இந்திய ஏ அணி 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து மீண்டும் நெருக்கடிக்கு உள்ளானது.

இந்தச் சூழலில் தொடக்க வீரராகக் களத்தில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் யஷ் ரத்தோட் கைகோர்த்தார். இருவரும் விக்கெட்டை இழக்காமல் நிதானமாக விளையாடியதுடன், கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி ரன்களையும் வேகமாகச் சேர்த்தனர்.

போட்டி டிரா

இந்திய ஏ அணி 204 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆடுகளம் நான்காவது நாளிலும் பெரிய அளவில் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக மாறாததால், இந்திய அணி டிக்ளேர் செய்து நியூசிலாந்து ஏ அணிக்கு இலக்கு நிர்ணயித்து வெற்றியைத் தேடும் சூழல் உருவாகவில்லை. யஷ் ரத்தோட் சதமடித்ததும் தேநீர் இடைவேளைக்குப் பிறகு இரு அணிகளும் போட்டியை முடித்துக்கொள்ள ஒப்புக்கொண்டன.

SCROLL FOR NEXT