கிரிக்கெட்

இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் மாற்றம் ?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே சுற்றுப்பயணங்களில் வெளிப்படுத்திய செயல்பாடுகள் குறித்து, அடுத்த மாத தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளது.

இந்த ஆய்வில், சமீபத்திய அனைத்து வெள்ளைப் பந்து போட்டிகளும் பரிசீலிக்கப்பட உள்ளன. குறிப்பாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் இந்திய அணி வெளிப்படுத்திய செயல்பாடுகள் முக்கியமாக ஆய்வு செய்யப்படவுள்ளன.

அயர்லாந்துக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்திய அணி முதல் முறையாக தோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், மீதமுள்ள 4 போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்தது.புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் இது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

அதேபோல், சுப்மன் கில் தலைமையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்திடம் தொடரை இழந்தது.

இருப்பினும், தற்போது நடைபெற்று வரும் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

மேலும், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையிலான ஆதரவு (Support Staff) குழுவில் உள்ள சில உறுப்பினர்களின் ஒப்பந்தங்களும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும். ஆனால் எந்த உறுப்பினர்களின் ஒப்பந்தங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன என்பது குறித்து அவர் விவரம் தெரிவிக்கவில்லை.