சென்னை,
3-வது சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்க இருந்தது. இடைவிடாது பெய்த மழையால் முதல் நாள் ஆட்டம் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டு நேற்று நடைபெற்றது.
ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை வைஷ்ணவி அத்கர் 3-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ஜோடி பர்ரேஜை தோற்கடித்தார். டபிள்யூ.டி.ஏ. டூர் போட்டிகளில் வைஷ்ணவி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். மராட்டியத்தை சேர்ந்த 21 வயதான வைஷ்ணவி 2-வது சுற்றில் ரஷியாவின் அனஸ்டசியா ஜகரோ வாவை சந்திக்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் தமிழக வீராங்கனை மாயா ரேவதி, போலந்தின் கேதர்ஜினா காவாவுடன் மல்லுக்கட்டினார். இருவரும் தலா ஒரு செட்டை வென்ற நிலையில் கடைசி செட்டில் அனல் பறந்தது. இதில் 3-5 என்று பின்தங்கிய மாயா அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டெழுந்தார். டைபிரேக்கர் வரை போராடி அந்த செட்டை வசப்படுத்திய மாயா முடிவில் 6-4, 2-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வெற்றிக்கனியை பறித்தார்.
நடப்பு சாம்பியனான ஜேனிஸ் டிஜென் (இந்தோனேசியா) தன்னை எதிர்த்த கேத்ரின் ஹயை (அமெரிக்கா) 6-1, 6-2 என்ற நேர் செட்டில் விரட்டியடித்தார். வெரோனிகா பால்கோவ்ஸ்கா (போலந்து) 7-6 (7-3), 6-4 என்ற நேர் செட்டில் முன்னாள் சாம்பியனான லின்டா புருவிர்தோவாவுக்கு (செக்குடியரசு) அதிர்ச்சி அளித்தார். வெரோனிகா அடுத்து மாயாவை எதிர்கொள்கிறார். ஸ்டெபானினி (இத்தாலி). மை ஹோன்டாமா, மோயுகா உச்சிமா(இருவரும் ஜப்பான்), போலினா குடெர்மித்தோவா (உஸ்பெகிஸ்தான்), ஜோவன்னா கார்லாண்ட் (சீனதைபே). ஆகியோரும் தங்களது ஆட் டங்களில் வெற்றி பெற்றனர்.