கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு 48 ரன்களும், பிரெவிஸ் 41 ரன்களும் குவித்தனர்.

சென்னை,

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 22-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங் சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. இன்று பவர்பிளேயில் ரன்களை குவித்த சென்னை, டெத் ஓவர்களில் சொதப்பியது. இறுதியாக 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.

இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு 193 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு 48 ரன்களும், பிரெவிஸ் 41 ரன்களும் குவித்தனர். கொல்கத்தா தரப்பில் கார்த்திக் தியாகி 2 விக்கெட்டுகளும், சுனில் நரைன், அனுகுல் ராய், வைபவ் அரோரா தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர். தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.