சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (திங்கட்கிழமை) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 63-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்சை சந்திக்கிறது.
சென்னை அணி 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி (2 முறை டெல்லி, கொல்கத்தா, 2 முறை மும்பை, லக்னோ அணிகளுக்கு எதிராக), 6 தோல்வி கண்டு (ராஜஸ்தான், பஞ்சாப், பெங்களூரு, ஐதராபாத், குஜராத், லக்னோ அணிகளுக்கு எதிராக) 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி கடந்த ஆட்டத்தில் லக்னோவிடம் உதை வாங்கியதால் அடுத்த சுற்று வாய்ப்பு சிக்கலானது.
சென்னை அணி எஞ்சிய 2 ஆட்டங்களில் வெற்றி பெறுவதுடன், மற்ற ஆட்டங்களின் முடிவும் சாதகமாக அமைந்தால் தான் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைய முடியும். இன்றைய ஆட்டத்தில் தோல்வி கண்டால் வெளியேறி விடும். இதனால் சென்னை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் களம் காணுகிறது.
இந்த சீசனில் உள்ளூரில் சென்னை அணியின் கடைசி ஆட்டம் இது என்பதால், காயம் காரணமாக இதுவரை ஆடாத 44 வயது முன்னாள் கேப்டன் தோனி களம் இறங்குவாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஐதராபாத் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி (கொல்கத்தா, 2 முறை ராஜஸ்தான், சென்னை, டெல்லி, மும்பை, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக), 5 தோல்வியுடன் (பெங்களூரு, லக்னோ, பஞ்சாப், கொல்கத்தா, குஜராத் அணிகளுக்கு எதிராக) 14 புள்ளிகள் எடுத்துள்ளது. குஜராத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 169 ரன் இலக்கை விரட்டுகையில் 86 ரன்னில் சுருண்டு ஏமாற்றம் அளித்தது. அந்த அணி எஞ்சிய 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் எந்தவித பிரச்சினையும் இன்றி அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கலாம். ஒன்றில் வென்றால் மற்ற ஆட்டங்களில் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டியது வரும்.
அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த ஐதராபாத் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும். அதேநேரத்தில் ஐதராபாத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 10 ரன் வித்தியாசத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து, அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க சென்னை அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் சென்னையும், 8-ல் ஐதராபாத்தும் வென்று இருக்கின்றன.
சென்னை
சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), உர்வில் பட் டேல், கார்த்திக் ஷர்மா, டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, பிரசாந்த் வீர், அன்ஷூல் கம்போஜ், நூர் அகமது, ஸ்பென்சர் ஜான்சன், முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங்.
ஐதராபாத்
டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், ரவிச்சந் திரன் சமரன், ஹென்ரிச் கிளாசென், சலில் அரோரா, நிதிஷ் குமார் ரெட்டி, கம்மின்ஸ் (கேப்டன்), ஷிவாங் குமார், பிரபுல் ஹிங்கே, இஷான் மலிங்கா, சகிப் ஹூசைன்.