கிரிக்கெட்

சிஎஸ்கே வலைப்பயிற்சியில் புஜாராவுக்கு பந்துவீச மறுத்த ஹேசில்வுட்... பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான காரணம்

புஜாரா அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

புஜாரா,

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்டர் புஜாரா, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் இருந்தபோது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தனக்கு பந்துவீச மறுத்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

வலைப்பயிற்சியில் பந்துவீச மறுப்பு

2018-19 மற்றும் 2020-21-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் ஹேசில்வுட்டின் பந்துவீச்சை புஜாரா பல மணி நேரம் எதிர்கொண்டார். இந்த இரு தொடர்களிலும் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது.

அதன்பின்னர் ஐ.பி.எல். தொடரில் இருவரும் சி.எஸ்.கே. அணிக்காக தேர்வு செய்யப்பட்டனர். அப்போது வலைப்பயிற்சியில் ஹேசில்வுட் புஜாராவுக்கு பந்துவீச மறுத்துள்ளார்.

“இவருக்கு நான் பந்துவீச மாட்டேன்”

இதுகுறித்து புஜாரா கூறுகையில், “2018 மற்றும் 2021 ஆஸ்திரேலிய தொடர்களின்போது ஜோஷ் ஹேசில்வுட்டின் பந்துவீச்சை நான் அதிகளவில் எதிர்கொண்டேன். அதன்பிறகு நான் சிஎஸ்கே அணியால் தேர்வு செய்யப்பட்டேன். முதல்முறையாக வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்ய சென்றபோது, ஹேசில்வுட் எனக்கு பந்துவீச மறுத்துவிட்டார். ‘இவருக்கு நான் பந்துவீச மாட்டேன்’ என்று கூறினார்” என்றார்.

“ஏற்கனவே அதிகமாக பந்துவீசிவிட்டேன்”

மேலும், “எனக்கு அளவுக்கு அதிகமாக பந்துவீசிவிட்டதாக நகைச்சுவையாக கூறினார். அவர் விளையாட்டாக சொன்னாலும், உண்மையிலேயே எனக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசவில்லை” என்று புஜாரா அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.