புதுடெல்லி,
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18ந்தேதி முதல் நவம்பர் 15ந்தேதி வரை இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி. ஆடவர் டி20 உலக கோப்பை 2020 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் சூழலில் இந்த போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன என ஐ.சி.சி. அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தொடர்ந்து, ஐ.சி.சி. ஆடவர் டி20 உலக கோப்பை 2021 கிரிக்கெட் போட்டிகள், 2021ம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை நடைபெறும் என்றும் இறுதி போட்டி நவம்பர் 14ல் நடக்கும் என்றும் தெரிவித்து உள்ளது. இதேபோன்று ஐ.சி.சி. ஆடவர் டி20 உலக கோப்பை 2022 கிரிக்கெட் போட்டிகள், 2022ம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை நடைபெறும் என்றும் இறுதி போட்டி நவம்பர் 13ல் நடக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.
எனினும் இந்த போட்டிகள் நடைபெறும் இடம் பற்றி அறிவிப்பு வெளியாகவில்லை. 50 ஓவர் உலக கோப்பை போட்டி, 2023ம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை இந்தியாவில் நடைபெறும் என்றும் இறுதி போட்டி நவம்பர் 26ல் நடக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.