கிரிக்கெட்

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் புதிய முடிவு

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் 9 மாதம் தடையை சந்தித்த கேமரூன் பான்கிராப்ட், உஸ்மான் கவாஜாவின் கருத்தை ஆமோதித்து இருக்கிறார்.

பந்தை சேதப்படுத்திய சர்ச்சை தொடர்பாக 2018-ம் ஆண்டு கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அங்கம் வகித்த வீரர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது கருத்தை பகிர்ந்து கொள்ள ஒரு சுதந்திரமான அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மெல்போர்ன்,

2018-ம் ஆண்டு கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா சமீபத்தியில் வெளியிட்ட தனது சுயசரிதை புத்தகத்தில் புதிய தகவல்களை பகிர்ந்து இருந்தார். பந்தை உப்புத்தாளை கொண்டு (சான்ட்பேப்பர்) தேய்த்து அதன் தன்மையை மாற்றிய விஷ யம் ஆஸ்திரேலிய அணியில் அங்கம் வகித்த அனைவருக்கும் முன்கூட்டியே தெரியும். ஆனால் அப்போதைய கேப்டன் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோரை மட்டும் பலிகடாவாக்கி தண்டித்தது தவறு. ஒட்டு மொத்த அணியும் இதற்கு பொறுப்பேற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தற்போதைய டெஸ்ட் அணியின் கேப்டன் கம்மின்ஸ், வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் உள் ளிட்ட வீரர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்தனர்.

இந்த நிலையில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சை தொடர்பாக மீண்டும் அதிகாரபூர்வ விசாரணை தொடங்கப்படாது என்று தெளிவுப்படுத்தி இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதற்கு பதிலாக 2018-ம் ஆண்டு கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அங்கம் வகித்த வீரர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது கருத்தை பகிர்ந்து கொள்ள ஒரு சுதந்திரமான அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இதற்கிடையே, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் 9 மாதம் தடையை சந்தித்த கேமரூன் பான்கிராப்ட், உஸ்மான் கவாஜாவின் கருத்தை ஆமோதித்து இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பந்தை சேதப்படுத்தும் திட்டம் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணியில் அங்கம் வகித்த அனைவருக்கும் முன்கூட்டியே தெரியும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்திய விசாரணையில் சக வீரர்களை காப்பாற்றுவதற்காக நான் முழு உண்மையையும் கூறாமல் மறைத்து விட்டேன்” என்று புதிய புயலை கிளப்பி இருக்கிறார்.

SCROLL FOR NEXT