கிரிக்கெட்

ஆணாக இருந்து பெண்ணாக மாறிய அனயா விளையாட, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதி

அவ்வப்போது கிரிக்கெட் விளையாடும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன். உள்ளூர் கிரிக்கெட்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை அணிக்காக விளையாடி இருக்கிறார்.

இந்த சூழலில் ஆர்யன் பெண்ணாக உணர்ந்ததையடுத்து கடந்த மார்ச் மாதம் தாய்லாந்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு பெண்ணாக மாறினார். தனது பெயரையும் அனயா என மாற்றிக் கொண்டார். இடக்கை பேட்டரான 25 வயதான அனயா அவ்வப்போது கிரிக்கெட் விளையாடும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் அனயா ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் உள்ளிட்ட முதன்மையான பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து எட்டி விடுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

என்றாலும் ஓராண்டுக்கு அவரது உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு 10-க்கு (நானோமோல் லிட்டர்) குறைவாக இருக்க வேண்டியது அவசியம். தற்போது இதன் அளவு குறைவாக இருப்பதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.