சென்னை,
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ள மும்பை (9வது இடம்), லக்னோ (10வது இடம்) பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்துவிட்டது. பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பெங்களூரு, 2வது இடத்தில் உள்ள குஜராத் பிளே ஆப் சுற்றை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டன. அதேவேளை, எஞ்சிய 2 இடங்களுக்கு 6 அணிகள் போட்டியிடுகின்றன.
இதில், 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வி என 12 புள்ளிகளுடன் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது இடத்தில் உள்ளது. இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்றுக்குள் நுழையுமா? என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பிளே ஆப் நுழைய வாய்ப்புகள்:
சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னும் 3 ஆட்டங்களில் (லக்னோ, ஐதராபாத், குஜராத்) ஆட உள்ளது. அந்த 3 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றால் 18 புள்ளிகளை பெறும். 3 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் 18 புள்ளிகளை பெற்று டாப் 2 இடங்களுக்குள் முன்னேறி புளே ஆப் சுற்றுக்குள் நுழையும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் 3 ஆட்டங்களில் 2ல் வெற்றிபெற்றால் 16 புள்ளிகளை பெறும். இந்த சூழ்நிலையிலும் பிளே ஆப் சுற்றுக்குள் சென்னை நுழைய முடியும். குறிப்பாக, குஜராத், ஐதராபாத் அணிகளை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் 3 ஆட்டங்களில் 1ல் மட்டும் வெற்றிபெற்றால் 14 புள்ளிகளை மட்டுமே பெறும். இத்தகைய சூழ்நிலையில் சென்னை பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு மிகவும் குறைவாகும். இந்த சூழ்நிலையில் ரன்ரேட் அடிப்படையில் பிற அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழையவே அதிக வாய்ப்பு உள்ளது. பிற அணிகள் தோல்வியை சந்தித்தித்தால் சென்னைக்கு சற்று வாய்ப்பு உள்ளது.
அதேபோல், அடுத்த 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்தால் சென்னை பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழக்கும். இதனால், அடுத்த 3 ஆட்டங்களிலும் வெற்றிபெற்று சென்னை பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய வேண்டும் என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.