மும்பை,
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியை முதன்முதலில் பார்த்தபோது, அவர் மிகவும் திமிரான இளைஞர் என்று நினைத்ததாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.
2008-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. அந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றபோது, விராட் கோலியை முதன்முதலில் கவனித்ததாக ஸ்டெய்ன் கூறியுள்ளார்.
அப்போது, “இந்தச் சிறுவன் யார்? இவ்வளவு திமிராக இருக்கிறானே?” என்று நினைத்ததாக அவர் சிரித்துக்கொண்டே தெரிவித்தார். பின்னர் விராட் கோலி தன்னுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடப் போகிறார் என்பது தெரியவந்தபோது ஆச்சரியமடைந்ததாகவும் கூறினார்.
2008 முதல் 2010 வரை ஆர்சிபி அணிக்காக விளையாடிய காலத்தில் விராட் கோலியுடன் நெருங்கிப் பழகியதாக ஸ்டெய்ன் தெரிவித்தார். இருவருக்கும் உணவு, இசை உள்ளிட்ட பல விஷயங்களில் ஒரே மாதிரியான விருப்பங்கள் இருந்ததாகவும், பெங்களூருவில் உள்ள உணவகங்களுக்குச் சென்று பர்கர் சாப்பிட்டு, இசையை ரசித்து நேரம் செலவிட்டதாகவும் நினைவுகூர்ந்தார்.
ஆரம்பத்தில் விராட் கோலி சாதாரண டி-ஷர்ட், ஷார்ட்ஸ் அணிந்து செருப்பு போட்டுக்கொண்டு எளிமையாக இருந்ததாகவும், பின்னர் விளம்பர நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் வந்த பிறகு அவரது தோற்றம் மாறியதாகவும் ஸ்டெய்ன் கூறினார்.
விராட் கோலி தனது உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டும் குணம் கொண்டவர் என்றும், அவரது இந்தத் தன்மை தனக்குப் பிடிக்கும் என்றும் ஸ்டெய்ன் தெரிவித்தார்.
2013 முதல் 2021 வரை ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி, அந்த அணியை ஒருமுறை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். 2016-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 973 ரன்கள் குவித்தது இன்றும் ஒரு சீசனில் வீரர் எடுத்த அதிகபட்ச ரன்னாக உள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 2023 முதல் 2026 வரை தொடர்ச்சியாக நான்கு சீசன்களில் 600-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.