சவுத்தாம்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் போட்டி மழையால் ரத்துசெய்யப்பட்ட நிலையில், எஞ்சிய 4 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 4-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. நேற்றைய ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில், இங்கிலாந்து டி20 தொடர் குறித்து ஸ்ரேயஸ் ஐயர் கூறியதாவது;
”ஒவ்வொரு மைதானத்திலும், இதுவரை நாங்கள் விளையாடியதிலேயே இதுதான் சிறந்த விக்கெட் என்று நான் உணர்கிறேன். முதல் போட்டியிலிருந்தே ஆடுகளத்தின் தன்மைகள் மாறிக்கொண்டே இருந்தன. எல்லா ஆடுகளச் சூழல்களையும் கற்றுக்கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும்.
போட்டிகளில் வெற்றி பெறுவதில் பீல்டிங் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாங்கள் சில கேட்சுகளைத் தவறவிட்டோம். குறிப்பாக நீங்கள் வெளிநாட்டு ஆடுகளச் சூழல்களுக்கு வரும்போது, மைதானம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். எனவே, அதற்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியது முக்கியம்.
இங்கிலாந்து அணியினர் சிறப்பாக பந்துவீசினார்கள். சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் இங்கு நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளனர். நாங்கள் ஓரிரு கேட்சுகளைத் தவறவிட்டோம். அது ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. இருப்பினும், இது ஒரு சிறந்த பாடம். அடுத்த முறை இங்கு வரும்போது வீரர்கள் இதை அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.