டாக்கா,
வெஸ்ட்இண்டீஸ்-வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 272 ரன்னும், வெஸ்ட்இண்டீஸ் 245 ரன்னும் எடுத்தன. 27 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 3-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 79 ரன் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் 142 சுருண்டது. வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் கேப்டன் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டும். ஜோமில் வாரிகன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து வங்காளதேசம் நிர்ணயித்த 170 ரன் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண் டீஸ் அணி 35.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிரன்டன் கிங் 81 ரன்னுடனும், கவிம் ஹாட்ஜ் 31 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுகள் கபளீகரம் செய்த வெஸ்ட்இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் ஜோமில் வாரிகன் ஆட்டநாயகன் விருது பெற் றார்.இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
தோல்வி தொடர்பாக பேசிய வங்காளதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ,
ஒட்டுமொத்தமாக ஏமாற்றமளிக்கும் ஆட்டமாக அமைந்தது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்று துறைகளிலும் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறிவிட்டோம். இதுதான் தற்போது எங்களுடைய முக்கியக் கவலையாக உள்ளது.
அணியின் டிரெஸ்ஸிங் ரூமிலும், போட்டிக்கான தயாரிப்பிலும் நல்ல நோக்கமும் திட்டமிடலும் இருந்தன. வீரர்கள் அனைவரும் அணிக்காகச் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஆர்வத்துடன்தான் இருந்தார்கள்.
ஆனால், இது எங்களுக்குச் சரியாக அமையாத ஒரு மோசமான நாளாகிவிட்டது என்று நினைக்கிறேன். நான் ஏற்கெனவே கூறியதைப் போல, பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்று துறைகளிலும் நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை. குறிப்பாக, பீல்டிங்கிலும் நிறைய தவறுகள் செய்தோம்.
சில நேரங்களில் இதுபோன்ற மோசமான நாட்கள் ஏற்படுவது இயல்புதான். இருப்பினும், வீரர்களின் நோக்கமும் போட்டிக்கான தயாரிப்பும் சிறப்பாகவே இருந்தன என்று நம்புகிறேன். என தெரிவித்தார்.