கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வி.....மார்க்ரம் விளக்கம்

அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின .

கொல்கத்தா,

2026 டி20 உலகக் கோப்பை தொடர் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 போட்டி முடிவடைந்த நிலையில், இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின .

அதன்படி, முதல் அரையிறுதிப் போட்டி இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் தற்போது நடைபெற்றது. இப்போட்டிக்கான டாஸை வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் ஆட்டமிழக்காமல் 55(30)ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் கோல் மெகான்சி, மாட் ஹென்றி மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து விளையாடியது. தொடக்க வீரர்களாக டிம் சைபராட் , பின் ஆலன் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர்.

பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட இருவரும் அரைசதமடித்து அசத்தினர். டிம் சீபராட் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த பின் ஆலன் 33 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

இதனால் 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து 173 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தோல்வி தொடர்பாக பேசிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் கூறியதாவது,

அவர்கள் முதலில் நன்றாக பந்து வீசினார்கள் என்று நினைக்கிறேன். பின் ஆலனின் ஆட்டத்திற்கு மிகப்பெரிய பாராட்டு. துரதிர்ஷ்டவசமாக, இன்றிரவு எங்களுக்கு மிகவும் மோசமான இரவு. இன்றிரவு வித்தியாசமாக என்ன செய்திருக்க முடியும்? என்று கேட்டால் இப்போது சொல்வது கடினம். குழுவாக நாங்கள் சிந்திப்போம். விக்கெட் நன்றாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். அது மிகவும் நன்றாகத் தெரிந்தது. முடிவில் ஏமாற்றமடைந்தோம், ஆனால் இந்த தொடர் முழுவதும் சில நல்ல கிரிக்கெட்டை விளையாடிய அணி வீரர்கள் குறித்து பெருமைப்படுகிறேன்.என தெரிவித்தார்.