கிரிக்கெட்

பெங்களூரு மிரட்டல் பந்து வீச்சு; டெல்லி 75 ரன்களுக்கு ஆல் அவுட்

6 ஓவர்களில் டெல்லி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 13 ரன்கள் எடுத்தது.

டெல்லி,

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லியில் இன்று நடைபெற்று வரும் 39வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன

இதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

டெல்லி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் சஹில் பிரஹா ரன் எதுவும் எடுக்காமலும் (0), கேஎல் ராகுல் 1 ரன்னிலும், நிதிஷ் ரானா 1 ரன்னிலும், சமீர் ரிஸ்வி ரன் எதுவும் எடுக்காமலும் (0), ஸ்டப்ஸ் 5 ரன்னிலும், கேப்டன் அக்சர் பட்டேல் ரன் எதுவும் எடுக்காமலும் (0) அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.

இதனால் பவர் பிளே ஓவர்களான முதல் 6 ஓவர்களில் டெல்லி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 13 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளேவில் மிகக்குறைவான ரன்களை எடுத்த அணி என்ற மோசமான சாதனையை டெல்லி படைத்தது.

இதையடுத்து, டேவிட் மில்லருடன் ஜோடி சேர்ந்த அபிஷேக் பொரேல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மில்லர் 19 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கெயில் ஜேமிசன் 12 ரன்னிலும், குல்தீப் 3 ரன்னிலும் அவுட் ஆகினர். கடைசி வரை போராடிய அபிஷேக் பொரேல் 30 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் டெல்லி 16.3 ஓவரில் 75 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

மிரட்டலாக பந்து வீசிய பெங்களூரு வீரர்கள் ஜோஷ் ஹேசல்வுட் 3.3 ஓவரில் 12 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஷ்வர் குமார் 3 ஓவரில் 5 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சூயாஷ் சர்மா, குர்னால் பாண்டியா, ரஷிக் சலம் டிர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதையடுத்து 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூரு களமிறங்க உள்ளது.