இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கடந்த 2025-ம் ஆண்டு மே 12-ந்தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 14 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 123 போட்டிகளில் விளையாடிய அவர், 30 சதங்கள் உள்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார். இந்த நிலையில், விராட் கோலியின் ஓய்வு முடிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் அவர் கூறியதாவது:-
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விதம் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. கோலி போன்ற ஒரு வீரரைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் மைதானங்களுக்கு வருகின்றனர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர் இன்னும் சில ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியிருக்க முடியும். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக கோலி தீவிரமாகத் தயாராகி வந்தார். ஆனால், அவரது ஓய்வு தொடர்பான விவகாரத்தை இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்கலாம். உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து கோலியே நேரடியாக விளக்கம் அளிக்கும் வரை நமக்கு முழுமையாகத் தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, இங்கிலாந்து தொடரில் இளம் வீரரை கேப்டனாக நியமிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும், கோலியின் பேட்டிங் செயல்பாட்டின் அடிப்படையிலேயே அணியில் இடம் வழங்கப்படும் என்றும் தேர்வுக்குழு அவரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால் அதிருப்தியடைந்த கோலி, இங்கிலாந்து தொடரில் பங்கேற்க விரும்பவில்லை என்று தேர்வுக்குழுவிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவரை சமாதானப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் சிலர் மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், இந்திய அணியின் தேர்வுக்குழு சில துணிச்சலான முடிவுகளை எடுத்திருந்தாலும், மூத்த வீரர்கள் தொடர்பான விவகாரங்களை இன்னும் கவனமாகக் கையாண்டிருக்கலாம் என்றும் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.