புதுடெல்லி,
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அறிமுகமான இளம் வீராங்கனை நிகி பிரசாத்தின் ஆட்டத்தை இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 114 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஸ்மிருதி மந்தா(9), ஷபாலி வர்மா(4), ஹர்மன்பிரீத் கவுர்(1), அனுஷ்கா சர்மா(4) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த அறிமுக வீராங்கனை நிகில் பிரசாத்-தீப்தி சர்மா இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இவர்களின் ஆட்டத்தால் இந்திய அணி 15.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதில் நிகில் பிரசாத் 39 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். தீப்தி சர்மா 49 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இப்போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய தீப்தி சர்மா, நிகி பிரசாத்தின் ஆட்டம் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நிகி மிகவும் சிறப்பாக விளையாடினார். உண்மையில், இது அவருடைய முதல் போட்டி என்றே தெரியவில்லை. ஏற்கெனவே நாட்டுக்காகப் பல போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருப்பதை போலச் செயல்பட்டார்.
இளம் வீராங்கனையிடம் இருந்து இத்தகைய நம்பிக்கையை பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அணிக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டபோது, தேவையான கூட்டணியை அமைத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த போட்டியின் மூலம் அவர் அதிக நம்பிக்கையைப் பெற்றிருப்பார் என்று நம்புகிறேன்” என்றார்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரில் தனது ஆதிக்கத்தை தொடர இந்திய அணி முயற்சிக்கும்.