மும்பை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதின. தசைப்பிடிப்பால் அவதிப்படும் மும்பை வீரர் ரோகித் சர்மா முழு உடல் தகுதியை எட்டாததால் இந்த ஆட்டத்திலும் இடம் பெறவில்லை. ‘டாஸ்’ ஜெயித்த மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 243 ரன்கள் குவித்தது. 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 249 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐதராபாத் அணிக்கு இது 6-வது வெற்றியாகும். மும்பைக்கு 6-வது தோல்வியாகும். புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் மும்பை உள்ளது.இந்த தோல்வியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆப் கனவு கிட்டத்தட்ட நொறுங்கியுள்ளது. ஆனாலும் பிளே ஆப்க்கான வாய்ப்பு முற்றிலும் முடிந்துவிடவில்லை. மீதமுள்ள 6 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் வென்றால் அந்த அணியால் டாப் 4-க்குள் நுழைந்துவிடும் வாய்ப்பு உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி மீதமுள்ள 6 போட்டிகளிலும் வென்றால் 16 புள்ளிகளுடன் பிளே ஆப் போய்விடலாம்.
மாறாக ஒரு போட்டியில் தோற்றால் கூட 14 புள்ளிகளே கிடைக்கும். அப்போது ரன் ரேட், பிற அணிகளின் வெற்றியை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். 2 போட்டிகளுக்கு மேல் தோற்றால், மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு கிளம்ப வேண்டியதுதான். அதாவது, மும்பை இந்தியன்ஸ் அணி மீதமுள்ள அனைத்து போட்டியிலும் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றை நினைத்து பார்க்கலாம். ஆனால் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி உள்ள பார்முக்கு அது கொஞ்சம் கடினமானதே என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.