லண்டன்,
2014-க்கு பிறகு மீண்டும் இங்கிலாந்து சீருடை அணிவது மிகச் சிறப்பான தருணம் என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
சிறப்பு ஆலோசகர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், அந்த அணியின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு (2027) அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பைக்கு இங்கிலாந்து அணியை வலுவாக தயார்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
277 போட்டிகள்
தென் ஆப்பிரிக்காவில் பிறந்த கெவின் பீட்டர்சன், இங்கிலாந்து அணிக்காக 104 டெஸ்ட், 136 ஒருநாள் மற்றும் 37 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
'பெருமிதமாக உள்ளது'
சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டது குறித்து கெவின் பீட்டர்சன் கூறுகையில், “தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியின் வெற்றிப் பயணத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதில் நான் பெருமிதம் கொள்கிறேன். எங்களது வெள்ளைப்பந்து அணியில் திறமையான வீரர்கள் நிறைய பேர் உள்ளனர்.
அவர்களது முழுத் திறமையை வெளிக்கொணர அவர்களுடன் இணைந்து அயராது உழைக்க ஆர்வமாக இருக்கிறேன். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக மீண்டும் இங்கிலாந்து அணியின் சீருடையை அணிவது மிகுந்த கௌரவத்தையும், மிகவும் சிறப்பான தருணத்தையும் அளிக்கிறது” என்றார்.