புதுடெல்லி,
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மைய மைதானத்தில் நடந்தது. இதன் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் தெற்கு- வடக்கு மண்டல அணிகள் மோதின. இதில் முதல் இன்னிங்சில் வடக்கு மண்டலம் 195 ரன்னும், தெற்கு மண்டலம் 312 ரன் னும் எடுத்தன. 117 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வடக்கு மண்டலம் 3-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வடக்கு மண்டல அணி 297 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. தெற்கு மண்டலம் தரப்பில் நிதேஷ் 5 விக்கெட்டும், கவுரி சாய்தேஜா, ஸ்ரேயாஸ் கோபால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய தெற்கு மண்டல அணி 43.1 ஓவர் களில் 3 விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இதன் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரு கிற 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. இதில் தெற்கு மண்டலம், இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணியுடன் மோதுகிறது.