கிரிக்கெட்

துலீப் டிராபி: கிழக்கு மண்டல அணி ஆதிக்கம்

கிழக்கு மண்டல அணி 5 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது.

சென்னை,

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் 2026-27 துலீப் டிராபி இறுதிப் போட்டியில், கிழக்கு மண்டல அணி வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறியுள்ளது. முதல் இன்னிங்ஸில் இஷான் கிஷனின் (270 ரன்கள்) சிறப்பான பேட்டிங்கால் கிழக்கு மண்டல அணி 708 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய தெற்கு மண்டல அணி 336 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால், கிழக்கு மண்டல அணிக்கு முதல் இன்னிங்ஸில் 372 ரன்கள் முன்னிலை கிடைத்தது.

தெற்கு மண்டல அணியின் இன்னிங்ஸில் திலக் வர்மா 99 ரன்கள் எடுத்து தனி வீரராக போராடினார். சதத்திற்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ஆட்டமிழந்தது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. தேவ்தத் படிக்கல் 62 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற பேட்டர்கள் நீண்ட நேரம் களத்தில் நிலைக்காததால் அந்த அணி 336 ரன்களிலேயே சுருண்டது.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய கிழக்கு மண்டல அணி, மீண்டும் அதிரடியாக ரன்கள் சேர்த்தது. குறிப்பாக கேப்டன் இஷான் கிஷன் 80 ரன்கள் விளாசி அணியின் முன்னிலையை மேலும் அதிகரித்தார். நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் கிழக்கு மண்டல அணி 5 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது.

ஒட்டுமொத்த முன்னிலை 584 ரன்களாக உயர்ந்தது. 584 ரன்கள் முன்னிலை இருப்பதால், போட்டி டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற கிழக்கு மண்டல அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது.

SCROLL FOR NEXT