கிரிக்கெட்

துலீப் கோப்பை இறுதிப்போட்டி சென்னையில் இன்று தொடக்கம்: கோப்பையை வெல்லப் போவது யார்?

இந்த இறுதிப்போட்டியில் திலக் வர்மா, சிராஜ், தேவ்தத் படிக்கல் இஷான் கிஷன், வைபவ் சூர்யவன்சி, ஷமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை,

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (செப்டம்பர் 6) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. வரும் 10-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் தெற்கு மண்டலம் மற்றும் கிழக்கு மண்டல அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

2-வது முறையாக

துலீப் கோப்பை இறுதிப்போட்டியில் தெற்கு மண்டலம் மற்றும் கிழக்கு மண்டல அணிகள் 2-வது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. இதற்கு முன்பு 1970-71 சீசனில் இரு அணிகளும் இறுதிப்போட்டியில் சந்தித்தன. அந்த ஆட்டத்தில் தெற்கு மண்டலம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

13 முறை சாம்பியன்

தெற்கு மண்டலம் அணி இதுவரை 13 முறை துலீப் கோப்பையை வென்றுள்ளது. அந்த அணி கடைசியாக 2023-ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மீண்டும் இம்முறை கோப்பையை வென்று தனது ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் தெற்கு மண்டலம் களமிறங்குகிறது.

மூன்றாவது கோப்பை

மறுபுறம், கிழக்கு மண்டலம் அணி கடைசியாக 2012-13 சீசனில் துலீப் கோப்பையை வென்றது. இதுவரை 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அந்த அணி, தற்போது 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் இறுதிப்போட்டியில் விளையாடுகிறது.

முன்னணி வீரர்கள் களம்

இந்த இறுதிப்போட்டியில் தெற்கு மண்டலம் அணிக்காக திலக் வர்மா, சிராஜ், தேவ்தத் படிக்கல் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களமிறங்க உள்ளனர். கிழக்கு மண்டலம் அணியில் இஷான் கிஷன், வைபவ் சூர்யவன்சி, முகமது ஷமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கே.எல். ராகுல்

முதலில் தெற்கு மண்டலம் அணிக்காக கே.எல். ராகுல் இறுதிப்போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்திய தகவலின்படி, அவர் இறுதிப்போட்டியில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT