சென்னை
எலிமினேட்டர் சுற்றுக்கான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், தகுதிச்சுற்று போட்டி 2-க்கு கோவை முன்னேறியுள்ளது.
8 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இத்தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. இதனை தொடர்ந்து தொடரின் 2ம் கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இத்தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அதன்படி, புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தன. இதில் நேற்று மதுரை, திருச்சி இடையே நடைபெற்ற முதல் தகுதிச்சுற்றுப்போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து புள்ளிகள் அடிப்படையில் மதுரை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று (வெளியேற்றுதல்) ஆட்டத்தில் கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடின.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியின்போது, டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. எனினும், மழையால் ஆட்டம் தடைப்பட்டது. இதனை தொடர்ந்து போட்டி மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.
இதனை அடுத்து, லீக் சுற்று போட்டிகளில் பெற்ற புள்ளிகள் பட்டியல் அடிப்படையில் கோவை அணி, தகுதிச்சுற்றுப்போட்டி 2-க்கு முன்னேறியுள்ளது. திருப்பூர் வெளியேறி உள்ளது. இதனால், கோவை அணி, தகுதிச்சுற்றுப்போட்டி 2-ல் திருச்சியை எதிர்கொள்ளும்.