கிரிக்கெட்

முடிவுக்கு வரும் சகாப்தம்..? ஆஸ்திரேலிய அணியின் ஒப்பந்த பட்டியலில் இருந்து மேக்ஸ்வெல் நீக்கம்

2026-27ம் ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து மேக்ஸ்வெல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் 2026-27ம் ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து மூத்த ஆல்-ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது, 37 வயதான அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அணியின் நீண்டகாலத் திட்டங்களில் இருந்து அவர் விலக்கப்பட உள்ளரா..? என்ற புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடும் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, 21 வீரர்கள் கொண்ட பட்டியலை இன்று அறிவித்துள்ளது. வங்கதேசம், நியூசிலாந்து, இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான பல டெஸ்ட் தொடர்கள் உட்பட, அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியா அணியின் முன்னுரிமைகளை இந்த அறிவிப்பு பிரதிபலிக்கின்றன.

அதில் 2026-2027 வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து மேக்ஸ்வெல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மேக்ஸ்வெல் கடைசியாக 2017-ல் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார். பின்னர் அவர் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம்பெறவில்லை.

மேக்ஸ்வெல் நீக்கப்பட்டது அணி நிர்வாகத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க முடிவுகளில் ஒன்றாகும். 37 வயதான அவர் கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார், மேலும் 2017ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. இதனால், நீண்ட வடிவப் போட்டிகளில் அவரது இடம் படிப்படியாகக் குறைந்துவிட்டது. ஒப்பந்தப் பட்டியலில் அவர் இல்லாதது, ஆஸ்திரேலியா அணியில் இனி அவர் இடம்பெற மாட்டார் என்பதையே காட்டுகிறது.

அவருக்கு டி20 போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தாலும், அங்கும் அவரது நிலை சரியாக இல்லை. ஆஸ்திரேலியாவின் 2026 டி20 உலகக் கோப்பை போட்டியில் மேக்ஸ்வெல் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உலகல்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணி சூப்பர் 8 சுற்றை தாண்டத் தவறியது குறிப்பிடத்தக்கது.