கிரிக்கெட்

2-வது டி20: ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து

பிலிப் சால்ட் 30 பந்துகளில் 58 ரன்கள் விளாசினார்.

கோல்டு கோஸ்ட்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று கோல்டு கோஸ்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது.

நிகில் சவுத்ரி அதிரடி ஆட்டம்

ஆஸ்திரேலிய அணியில் நிகில் சவுத்ரி அதிகபட்சமாக 35 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். ஜோயல் டேவிஸ் 25 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். தொடக்க வீரர் ஜேக் ப்ரேசர்-மெக்குர்க் 13 பந்துகளில் 27 ரன்களும், ஜேக் எட்வர்ட்ஸ் 8 பந்துகளில் 18 ரன்களும் எடுத்தனர்.

சாம் கரன் அசத்தல்

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சாம் கரன் 2 விக்கெட்டுகளையும், ஹென்றி குரோகோம்ப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜேமி ஓவர்டன் மற்றும் ஆதில் ரஷீத் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

13.1 ஓவரிலேயே இலக்கை எட்டிய இங்கிலாந்து

இதையடுத்து 185 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பிலிப் சால்ட் மற்றும் அனூரின் டொனால்ட் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். பிலிப் சால்ட் 30 பந்துகளில் 58 ரன்கள் விளாசினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய அனூரின் டொனால்ட் 32 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி 13.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 188 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஹாரி புரூக் 10 ரன்களுடனும், டாம் பாண்டன் 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

SCROLL FOR NEXT