லண்டன்,
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது.
இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. பர்மிங்கம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இங்கிலாந்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இங்கிலாந்து - இந்தியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. கார்டிப் நகரில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றால் இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும். இதற்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து தொடரை இழக்காமல் இருக்க நாளைய ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் நாளைய ஆட்டத்தில் வெற்றிபெற இங்கிலாந்து முனைப்பு காட்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
2வது ஒருநாள் போட்டியில் டாஸ் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்டிப் மைதானத்தில் 2வது பேட்டிங் செய்த அணியே அதிக முறை வெற்றிபெற்றுள்ளது.
குறிப்பாக, இந்த மைதானத்தில் 33 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் இதில் 2வது பேட்டிங் செய்த அணி 21 முறை வெற்றிபெற்றுள்ளது. இதனால் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யும் அணியின் வெற்றிவாய்ப்பு சற்று அதிகம் என்று ரசிகர்கள் கணித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப்பின் இந்திய அணியில் இணைந்துள்ள ரோகித் சர்மா, விராட் கோலி மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் 11 ரன்னிலும், கோலி 5 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். ஆனால் நாளைய ஆட்டத்தில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜோ ரூட், ஜோப்ரா ஆர்ச்சர் திகழ்கின்றனர். பேட்டிங்கில் ஜோ ரூட்டும், பந்து வீச்சில் ஆர்ச்சரும் இந்திய அணிக்கு கடும் சவால்களை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்டிப் மைதானத்தில் நாளை நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இந்த மைதானத்தில் விளையாடிய கடைசி 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்றுள்ளது. இதனால் நாளைய ஆட்டத்திலும் இந்தியா வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.