ஓவல்,
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் டாம் பான்டன் 44 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பென் டக்கெட் 115 பந்துகளில் 15 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உட்பட 133 ரன்கள் குவித்தார்.
வில் ஜாக்ஸ் 48 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார். இதனால் இங்கிலாந்து அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 328 ரன்கள் எடுத்தது. . ஆஸ்திரேலிய தரப்பில் ஜாக் எட்வர்ட்ஸ் 4 விக்கெட்டுகளையும், மேட் ரென்ஷா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் 4 ரன்களிலும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து மேட் ரென்ஷா 70 பந்துகளில் 55 ரன்களும், அலெக்ஸ் கேரி 53 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர். கேமரூன் கிரீன் 3 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். கூப்பர் கானலி 29 ரன்கள் சேர்த்தார்.
இங்கிலாந்து பந்துவீச்சில் சோனி பேக்கர் 4 விக்கெட்டுகளையும், லியாம் டாசன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. ஆட்டநாயகனாக பென் டக்கெட்டும், தொடர் நாயகனாக டாம் பான்டனும் தேர்வு செய்யப்பட்டனர்.