கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக்கோப்பை: டேனி அதிரடி சதம் - இங்கிலாந்து 219 ரன்கள் குவிப்பு

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

லண்டன்,

10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்தியா உள்பட 12 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து - இலங்கை

அதன்படி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஏமி ஜோன்ஸ், டேனி வயட் - ஹெட்ஜ் களமிறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் விளாசினர். ஏமி 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

டேனி சதம்

அடுத்து வந்த கேப்டன் நட் சிவர் பர்ண்ட் உடன் ஜோடி சேர்ந்த டேனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் இலங்கை பந்து வீச்சை சிதறடித்தனர். அதிரடியாக ஆடிய டேனி சதம் விளாசினார்.

இறுதியில் இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. டேனி 62 பந்துகளில் 105 ரன்களுடனும், கேப்டன் நட் சிவர் பர்ண்ட் 22 பந்துகளில் 46 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் மல்கி மடரா 1 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இலங்கை களமிறங்கி விளையாட உள்ளது.