டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான சூழல் அதிகரித்து வருவதால், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுக்கும் சமமான வாய்ப்பு அளிக்கும் வகையில் ஆடுகளங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாம் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக திகழும் அவர், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.எல்.டி20 தொடரில் டெசர்ட் வைப்பர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மைதானத்திலும் ஆடுகளத்தின் தன்மை மாறுபடும். சில மைதானங்களில் 200 ரன்களுக்கு மேல் எடுத்தால்தான் போட்டியில் போட்டியிட முடியும். வேறு சில மைதானங்களில் 100 ரன்கள் எடுத்தால்கூட வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும். எனவே, ஆடுகளத்தின் தன்மையை அறிந்து அதற்கேற்ப விளையாட வேண்டும் என்றார்.
மேலும், டி20 போட்டிகளில் பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்கள் எடுப்பது தற்போது வழக்கமாகி வருகிறது. சிறிய மைதான எல்லைகள், தரமான பேட்டுகள் மற்றும் பீல்டிங் கட்டுப்பாடுகள் ஆகியவை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளன. இதனால் பந்துவீச்சாளர்களுக்கும் உரிய வாய்ப்பு கிடைக்கும் வகையில் ஆட்டச்சூழல் அமைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்தார்.
ஐ.எல்.டி20 தொடரில் தனது முதல் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய பாபர் அசாம் 51 பந்துகளில் 86 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதன் மூலம் டெசர்ட் வைப்பர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அங்கு பெற்ற பழைய நினைவுகள் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமானவை என்றும் அவர் கூறியுள்ளார்.