கிரிக்கெட்

ஒவ்வொரு வீரரும் போட்டியை வென்று கொடுக்கக்கூடிய திறன் கொண்டவர்கள்: ஷ்ரேயாஸ் அய்யர் பாராட்டு

பின்னர் திலக் வர்மா - நமன் தீர் ஜோடி சிறப்பாக விளையாடி நம்பிக்கை அளித்தது.

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, ஒரு கட்டத்தில் 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் திலக் வர்மா - நமன் தீர் ஜோடி சிறப்பாக விளையாடி நம்பிக்கை அளித்தது.

நமன் தீர் ஆட்டமிழந்தநிலையில், தொடர்ந்து சிறப்பாக விளையாடிய திலக் வர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அவருடன் இணைந்து நிதீஷ் குமார் ரெட்டி 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

வெற்றி தொடர்பாக பேசிய இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் கூறியதாவது,

எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தனியாகப் போட்டியை வென்று கொடுக்கக்கூடிய திறன் கொண்டவர்கள் என்று நான் நம்புகிறேன். இன்றைய போட்டியில் அதற்கு ஓர் உதாரணத்தைக் கண்டோம். குறிப்பாக, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தபோது ஆட்டம் எங்கள் கைகளைவிட்டுச் செல்வதாகவே நினைத்தோம். ஆனால், திலக் வர்மாவும் நிதிஸ் ரெட்டியும் மிகுந்த மன உறுதியுடன் விளையாடினர். அதேபோல், நமன் தீர் அதிரடியாக விளையாடி அணிக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற சில போட்டிகளில் நமன் தீரின் ஆட்டத்தைப் பார்த்திருக்கிறோம். அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளரும் கூட. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாகச் செயல்படும் திறன் அவரிடம் உள்ளது. மேலும், களத்தில் அவர் செயல்படும் விதத்தைப் பார்க்கும்போது, அவர் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கும் முழுமையான கிரிக்கெட் வீரர் என்பது தெரிகிறது.

ஆரம்பத்தில் நாங்கள் அதிகமான டாட் பந்துகளை எதிர்கொண்டோம். இதனால் தேவையான ரன் விகிதம் அதிகரித்தது. இலக்கைத் துரத்தத் தொடங்கியபோது, எளிதாக ரன்களைக் குவித்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், பிரேஸ்வெல் மற்றும் சான்ட்னர் நடு ஓவர்களில் மிகச் சிறப்பாகப் பந்துவீசி ஆட்டத்தைக் கட்டுப்படுத்தினர். அவர்களின் பந்துவீச்சில் ரன்கள் எடுப்பது எளிதாக இருக்கவில்லை. இருப்பினும், நாங்கள் இடைவெளிகளைக் கண்டறிந்து பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட முயற்சித்திருந்தால், இலக்கை எளிதாக எட்டியிருக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக, அது நடக்கவில்லை. கிரிக்கெட்டில் இதுபோன்ற விஷயங்கள் சகஜம்தான். அடுத்த போட்டியில் நாங்கள் வலுவாக மீண்டு வருவோம் என்று உறுதியாக நம்புகிறேன்.. என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT