கிரிக்கெட்

விராட் கோலியால் பல லட்சம் செலவு... ஆர்சிபி முன்னாள் கேப்டன் பாப் டு பிளெஸ்ஸிஸ் சுவாரசிய தகவல்

2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பாப் டு பிளெஸ்ஸிஸை ஆர்சிபி அணி வாங்கியது.

பெங்களூரு,

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்தபோது விராட் கோலி தனக்கு அளித்த ஆதரவு குறித்தும், இருவருக்கும் இடையே உருவான நட்பு குறித்தும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் பாப் டு பிளெஸ்ஸிஸ் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

மேலும், விராட் கோலியுடன் ஏற்பட்ட நட்பால் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் வாங்கும் பழக்கம் தனக்கு வந்ததாகவும் அவர் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

கேப்டனாக பொறுப்பேற்க தயக்கம்

2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பாப் டு பிளெஸ்ஸிஸை ஆர்சிபி அணி வாங்கியது. அப்போது அந்த அணியின் கிரிக்கெட் இயக்குநராக இருந்த மைக் ஹெசன், அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.

“ஆர்சிபி அணியின் கேப்டனாக இருக்க விரும்புகிறீர்களா?” என்பதுதான் அந்தக் கேள்வி.

ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய விராட் கோலிக்கு பதிலாக டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட இருந்தார். அப்போது விராட் கோலி அவருக்கு அனுப்பிய செய்தி, கேப்டன் பொறுப்பை ஏற்கும் தயக்கத்தைப் போக்கியது.

இதுகுறித்து டு பிளெஸ்ஸிஸ் கூறுகையில், “விராட் கோலி எனக்கு ஒரு செய்தி அனுப்பினார். அதில், 'எனக்குப் பதிலாக உங்களை விட சிறந்த கேப்டன் யாரும் வர முடியாது. நீங்கள் அணிக்கு வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்' என்று தெரிவித்தார்.

அந்த ஒரு செய்தியிலேயே கேப்டனாக நான் பொறுப்பேற்பதை அவர் முழுமையாக ஏற்றுக்கொண்டார் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது” என்றார்.

விராட் ஆதரவு இல்லாவிட்டால் தோல்விதான்

ஆர்சிபி அணியின் கேப்டனாக இருப்பது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பதையும் டு பிளெஸ்ஸிஸ் உணர்ந்திருந்தார். குறிப்பாக, பெங்களூரு ரசிகர்கள் விராட் கோலியை எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தப் பொறுப்பை ஏற்கும்போது விராட் கோலியின் ஆதரவு எனக்கு மிகவும் அவசியம் என்று அவரிடமே கூறினேன். அவரது ஆதரவு இல்லாமல் இந்தப் பொறுப்பில் வெற்றி பெறுவது சாத்தியமில்லை. அவர் ஒரு வார்த்தை சொன்னால்கூட எனது கேப்டன்சி பாதிக்கப்படலாம்.

ஆர்சிபி அணி ஒரு போட்டியில் தோற்றால்கூட, பெங்களூரு மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் விராட் கோலியே மீண்டும் கேப்டனாக வர வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்கள் என்னைப் பிடிக்கவில்லை என்பதற்காக அப்படிக் கூறுவதில்லை. விராட் கோலியை கேப்டனாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் அவர்களது விருப்பம்.

ஆனால், விராட் எனக்கு முழு ஆதரவு அளித்தார். அது இல்லாமல் இருந்திருந்தால் அந்த மூன்று ஆண்டுகளையும் சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்திருக்கும்” என்றார்.

நெருங்கிய நண்பர்களான இருவரும்

விராட் கோலி 2013-ம் ஆண்டு முதல் ஆர்சிபி அணியை வழிநடத்தி வந்தார். 2021-ம் ஆண்டு சீசனுக்குப் பிறகு தனது பணிச்சுமையைக் குறைத்து பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

அதேபோல், தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து 2020-ம் ஆண்டு டு பிளெஸ்ஸிஸும் விலகியிருந்தார். இதனால் இருவருக்கும் ஒரே மாதிரியான அனுபவம் இருந்தது.

இதுகுறித்து டு பிளெஸ்ஸிஸ் கூறுகையில், “நான் ஏற்கெனவே ஒரு அணியின் கேப்டனாக இருந்துவிட்டு, பின்னர் சாதாரண வீரராக விளையாடிய அனுபவத்துடன் வந்தேன். அதனால், விராட் கோலியின் நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

எங்களுக்குள் முன்பே பெரிய நட்பு எதுவும் கிடையாது. ஆனால், ஆர்சிபி அணிக்கு வந்த முதல் நாளிலிருந்தே அவர் எனக்கு முழு ஆதரவு அளித்தார். விரைவிலேயே நாங்கள் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டோம்” என்றார்.

விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள்

2022 முதல் 2024 வரை தொடர்ந்து 3 சீசன்கள் ஆர்சிபி அணியின் கேப்டனாக டு பிளெஸ்ஸிஸ் செயல்பட்டார். 2023 சீசனுக்குப் பிறகு அந்தப் பொறுப்பில் இருந்து விலகியபோதும், விராட் கோலியுடனான நட்பைத் தொடர்ந்து வந்தார்.

அதேபோல், கோலியால் தனக்கு ஏற்பட்ட மற்றொரு பழக்கத்தையும் அவர் குறிப்பிட்டார்.

“மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நான் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் கொண்டவராக மாறிவிட்டேன். இவ்வளவு பணத்தை ஒரு கைக்கடிகாரத்துக்காக எப்படிச் செலவு செய்கிறீர்கள் என்று இப்போது பலரும் என்னிடம் கேட்கிறார்கள்.

எனது வாழ்க்கையிலேயே மிகவும் அதிக செலவை ஏற்படுத்திய நட்பு விராட் கோலியுடனானதுதான் என்று அவரிடமும் கூறியிருக்கிறேன். நான் வாங்கவே கூடாது என்று நினைத்த பல விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை வாங்குவதற்கு அவர்தான் காரணம்” என்று டு பிளெஸ்ஸிஸ் நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT