மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர், நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் பீல்டிங் பெரிய சவாலாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
நியூசிலாந்தின் குளிரான வானிலை மற்றும் பலத்த காற்று இந்திய வீரர்கள் கேட்ச் பிடிப்பதிலும், பந்தைத் துல்லியமாகத் தடுப்பதிலும் சிரமங்களை ஏற்படுத்தலாம் .குறிப்பாக, வெலிங்டனில் வீசும் பலத்த காற்றும், கிறைஸ்ட்சர்ச்சில் நிலவும் குளிர்ச்சியான சூழலும் உயரமாக வரும் கேட்ச்களைப் பிடிப்பதைச் சவாலாக்கும். எனவே, வீரர்கள் கைகளை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ள ஹேண்ட் வார்மர்களைப் பயன்படுத்துவதுடன், பீல்டிங்கின்போது உடல் தயார்நிலையையும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
இந்திய அணியின் பீல்டிங் தரம் கடந்த சில மாதங்களாகவே கவலைக்குரிய வகையில் இருக்கிறது. ஒட்டுமொத்த அணியிலும் பீல்டிங்குக்கான தெளிவான திட்டத்தையும் ஒழுக்கத்தையும் உருவாக்க வேண்டும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணிக்கு ஒரு தெளிவான அணுகுமுறை இருப்பதைப் போலவே, பீல்டிங்கிலும் அத்தகைய கலாசாரத்தை உருவாக்க வேண்டியது அவசியம். நியூசிலாந்து சுற்றுப்பயணம் அக்டோபர் 22-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், 2027 ஒருநாள் உலகக் கோப்பையை முன்னிட்டு இந்திய அணி தனது பீல்டிங் குறைபாடுகளைச் சரிசெய்வது முக்கியமானதாக இருக்கும்.என தெரிவித்துள்ளார்.