விண்ட்ஹோக்,
அயர்லாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நமீபியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அயர்லாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் 4 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்று சமநிலையில் இருந்தன.
இந்நிலையில், தொடரைத் தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று விண்ட்ஹோக்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் லோர்கான் டக்கர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, நமீபியாவின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் டிம் டெக்டர் 5 ரன்களிலும், ஆண்ட்ரூ பால்பிர்னி 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கேட் கார்மைக்கேல் 27 ரன்களும், ஹாரி டெக்டர் 21 ரன்களும் எடுத்தனர். கேப்டன் லோர்கான் டக்கர் 20 ரன்கள் சேர்த்தார். கடைசி வரிசையில் ஜோர்டான் நீல் 25 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் அயர்லாந்து அணி 33.1 ஓவர்களில் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நமீபியா தரப்பில் ஜே.ஜே. ஸ்மிட் 4 விக்கெட்டுகளையும், ஜாக் பிராசெல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணிக்கு தொடக்க வீரர் லூரென் ஸ்டீன்காம்ப் 44 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்தார். கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் 18 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். இறுதியில் ஜேன் கிரீன் 11 ரன்களுடனும், வில்லெம் மைபர்க் 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன் மூலம் 21.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நமீபியா, ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.