கிரிக்கெட்

கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன தென் ஆப்பிரிக்கா

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

கேப் டவுன்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட் ஆனது.

சமநிலை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

329 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 82.3 ஓவர்களில் 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

மார்க்ரம், அக்கர்மேன் சிறப்பான ஆட்டம்

தென் ஆப்பிரிக்க அணியில் மார்க்ஸ் அக்கர்மேன் 95 ரன்களும், எய்டன் மார்க்ரம் 78 ரன்களும் எடுத்தனர். டேவிட் பெடிங்ஹாம் 50 ரன்களும், மார்கோ யான்சன் 52 ரன்களும் சேர்த்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நாதன் லயன் 2 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் கூப்பர் கான்னொலி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது. நாளை நடைபெறும் 2-ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸை துவங்குகிறது.

SCROLL FOR NEXT