கிரிக்கெட்

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மாவிற்கு அபராதம்- ஏன் தெரியுமா?

ஐதராபாத் அணியின் துணை கேப்டன் அபிஷேக் சர்மாவிற்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

ஐ.பி.எல். தொடரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பரபரப்பான போட்டியில், ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, அதிரடி ஆட்டம் மூலம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை பதிவு செய்தது.

பின்னர் 227 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அணியின் சார்பில் ரகுவன்சி மட்டும் 52 ரன்கள் எடுத்து சிறப்பாக போராடினார். இருந்தாலும், முழு அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஐதராபாத் அணி வலுவான வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த போட்டியின் போது நடந்த ஒரு சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐதராபாத் அணியின் துணை கேப்டன் அபிஷேக் சர்மா 48 ரன்களில் அவுட் ஆனார். முசரபானி வீசிய பந்தை அவர் டீப் ஸ்கொயர் லெக் திசையில் உயரமாக அடித்தார். அப்போது எல்லைக்கோடு அருகே பாய்ந்து விழுந்து வருண் சக்ரவர்த்தி அற்புதமான கேட்ச் பிடித்தார். ஆனால் பந்தை தரையோடு பிடித்தது மாதிரியும் தெரிந்ததால் சந்தேகம் நிலவியது. பின்னர் டி.வி. ரீப்ளேயில் ஆய்வு செய்த 3-வது நடுவர், அவுட் என்று தீர்ப்பளித்தார். இதனால் அதிருப்திக்குள்ளான அபிஷேக் சர்மா முடிவுக்கு நடுவரிடம் எதிர்ப்பு தெரிவித்தார். இது ஐ.பி.எல். நடத்தை விதியை மீறிய செயல் என்பதால் அவருக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் போட்டிக்குப் பிறகும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.