கிரிக்கெட்

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர்... வரலாறு படைத்த ஹசன் மஹ்மூத்

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஹசன் மஹ்மூத் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.

அபுதாபி,

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

3 விக்கெட்டுகள்

அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸின்போது ஹசன் மஹ்மூத் இந்த சாதனையைப் படைத்தார்.

83-வது ஓவரில் இஸ்மத் ஆலம், கைஸ் அகமது ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க செய்தார். தொடர்ந்து வீசிய பந்தில் ஜியா-உர்-ரஹ்மானுக்கு நடுவர் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் வழங்கவில்லை. இதையடுத்து வங்காளதேச அணி டி.ஆர்.எஸ். முறையில் மேல்முறையீடு செய்தது. அதில் அவர் ஆட்டமிழந்தது உறுதியானது.

இதன் மூலம் ஹசன் மஹ்மூத் டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

3-வது டெஸ்ட் ஹாட்ரிக்

வங்காளதேச அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு அலோக் கபாலி 2003-ஆம் ஆண்டிலும், சோஹாக் காசி 2013-ஆம் ஆண்டிலும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இருவரும் சுழற்பந்து வீச்சாளர்கள்.

தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஹசன் மஹ்மூத் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வங்காளதேசத்தின் 3-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

5 விக்கெட்டுகள்

இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய ஹசன் மஹ்மூத் 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

SCROLL FOR NEXT