மான்செஸ்டர்
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் தொடங்கியது.
இதில் முதல் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. அபிஷேக் ஷர்மா (59), ஸ்ரேயாஸ் அய்யர் (68), ஷிவம் துபே (42) ரன்களை குவித்தனர்.
தொடக்க ஆட்டக்காரர்களில் சஞ்சு சாம்சன் 1 ரன்னில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். முன்னணி வீரரான இஷான் கிஷன் ரன் எதுவும் எடுக்காமலும், திலக் வர்மா (13), ஹர்ஷித் ராணா (0), அக்சர் பட்டேல் (3) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்த நிலையில், இங்கிலாந்து அணி விளையாட தயாரான நிலையில், மழை பெய்து குறுக்கீடு ஏற்பட்டது. இதனால், ஆட்டம் பாதிக்கப்பட்டது. போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டு 64 ரன்கள் இலக்காக கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மழை விடாமல் பெய்தது. இதனால், போட்டி நடக்கும் களம் பணியாளர்களால் மூடப்பட்டது. ஒரு மணிநேரத்திற்கு மேலாகியும் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனை தொடர்ந்து போட்டி கைவிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. அயர்லாந்து தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் எடுக்காத சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் முதவாவது ஆட்டத்திலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினர்.
இதனால் அவர்கள் ரன் சேர்க்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்த முறையும் இடம் கிடைப்பது சந்தேகம் தான். ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், வில் ஜாக்ஸ், சாம் கர்ரன், பில் சால்ட் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.
இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.