ராவல்பிண்டி,
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில், ராவல்பிண்டியில் இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக அலெக்ஸ் கேரி, மேத்திவ் ஷார்ட் களமிறங்கினர். கேரி 19 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஜோஷ் இங்கிஸ் 13 ரன்னிலும், லபுஷேன் ரன் எதுவும் எடுக்காமலும், கேமரூன் கிரீன் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
பின்னர், களமிறங்கிய மேட் ரென்ஷா, மேத்திவ் ஷார்ட் உடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அரைசதம் கடந்தனர். 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேத்திவ் ஷார்ட் அவுட் ஆனார். சிறப்பாக ஆடிய மேட் ரென்ஷா 61 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ஆஸ்திரேலியா 44.1 ஓவரில் 200 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் வீரர் அர்பத் மின்ஹஸ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கி விளையாடியது.
தொடக்கம் முதல் பாகிஸ்தான் அணி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ஹாஷி கோரி இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். நிலைத்து விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர்.
இதனால் 42.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.