ஆக்லாந்து,
முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியினர் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியில் டிம் சீபெர்ட் 38 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 30 ரன்களும், பிளேர் டிக்னர் 34 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்காததால் நியூசிலாந்து அணி 40.2 ஓவர்களில் 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 10 ஓவர்களில் 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குர்னூர் பிரார் 3 விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 6 பந்துகளைச் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த சுப்மன் கில் - விராட் கோலி இருவரும் நிதானமாக விளையாடி இந்திய அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். இந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. பின்னர், மழை காரணமாக போட்டி 32 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு, இந்திய அணிக்கு 143 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆடிய இந்திய அணிக்கு விராட் கோலி அதிரடியாக ரன் சேர்த்தார். அவர் 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய கேப்டன் சுப்மன் கில் 56 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விராட் கோலி 51 பந்துகளில் 74 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்திய அணி 22.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.