லண்டன்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இங்கிலாந்து- நியூசிலாந்து அணி இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் 1-4 என்ற கணக்கில் மோசமாக தோற்றது. இதனால் ஸ்டோக்சின் கேப்டன் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. இருப்பினும் கிரிக்கெட் வாரியம் அவர் மீது நம்பிக்கை வைத்து இன்னொரு வாய்ப்பு வழங்கியுள்ளது.
பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், அட்கின்சன், ராபின்சன், ஜோஷ் டாங்கு, சோயிப் பஷீர் என வலுவான அணியாகவே களம் காணுகிறது. எமிலியோ கே அறிமுக பேட்ஸ்மேனாக ஆடுகிறார். ஐ.பி.எல்.-ல் தொடர்ச்சியாக ஆடியதால் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இடம் பெறவில்லை.
டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணியில் டிவான் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளன்டெல், கிளென் பிலிப்ஸ், மேட் ஹென்றி, கைல் ஜாமிசன் என திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. மூத்த வீரர் வில்லியம்சன் இந்த தொடரில் 503 ரன் எடுத்தால் 10 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டுவார்.
புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் 150-வது டெஸ்ட் இதுவாகும். உலகில் அதிக டெஸ்ட் போட்டிகள் நடந்த மைதானம் இதுவாகும்.
இங்கு நியூசிலாந்து அணி இதுவரை 19 டெஸ்டுகளில் விளையாடி ஒன்றில் (1999-ம் ஆண்டு) மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 9-ல் தோல்வியும், 9-ல் டிராவும் கண்டுள்ளது. இந்த நீண்ட கால சோகத்துக்கு நியூசிலாந்து அணி இந்த முறை முற்றுப்புள்ளி வைக்குமா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.