கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இன்று மோதல்

ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

டர்பன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

தென்ஆப்பிரிக்க அணி கடந்த ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல்முறையாக உலக சாம்பியனாக உருவெடுத்தது. அதன் பின்னர் பாகிஸ்தான். இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாறு படைத்தது. அதன் தொடர்ச்சியாக இந்த தொடரில் ஆடுவதால் கூடுதல் நம்பிக் கையுடன் களம் இறங்கும். அத்துடன் அவர்களுக்கு உள்ளூர் சூழலும் அனுகூலமாக இருக்கும்.

தென் ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் மார்க்ரம், ரிக்கெல்டன், கேப்டன் பவுமா, டிரிஸ்டான் ஸ்டப்சும், பந்து வீச்சில் மார்கோ யான்சென், வியான் முல்டர், சைமன் ஹார்மரும் நல்ல நிலையில் உள்ளனர். ஒருநாள் தொடரின் போது தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட டோனி டி சோர்ஜி முதல் டெஸ்டில் இருந்து விலகினார். தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கடந்த மே மாதத்துக்கு பிறகு எந்தவொரு போட்டியிலும் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா பயிற்சி மேற்கொண்டார். இருப்பினும் முழு உடல் தகுதியை எட்டாததால் சேர்க்கப்படவில்லை. ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சு எடுபட்டதால், 2 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை (4-1) எளிதில் வென்றாலும், சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் அதிர்ச்சிகரமாக தோற்றது. அடுத்த டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் (1-1) செய்தது. அதன் பிறகு இந்த போட்டியில் கால்பதிக்கிறது. 2018-ம் ஆண்டு உப் புதாளை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி அதன் பிறகு தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்டில் ஆடுவது இதுவே முதல்முறையாகும்.

ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன். மேட் ரென்ஷாவும், பந்து வீச்சில் கேப்டன் கம் மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட்டும் வலுசேர்க்கின்றனர். கடைசி ஒருநாள் போட்டியின் போது தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் முதலாவது டெஸ்டில் ஆட முடியாதது அந்த அணிக்கு இழப்பாகும்.

ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை 102 டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 54-ல் ஆஸ்திரேலியாவும், 27-ல் தென்ஆப்பிரிக்காவும் வென்றுள்ளன. 21 ஆட்டங்கள் டிரா ஆனது. ஆஸ்திரே லிய அணி டர்பன் மைதானத்தில் 11 டெஸ்டில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது. இதில் கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்றதும் அடங்கும்.

மொத்தத்தில் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரு இடம் வகிக்கும் பலம் வாய்ந்த இரு அணிகள் கோதாவில் குதிப்பதால் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

SCROLL FOR NEXT