காலே,
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் கடந்த 15ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் அதிகபட்சமாக 167 ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய இலங்கை வீரர் தினுஷா 100 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் மனவ் சுதர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் 178 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தின் 4வது நாளான இன்று 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி வீரர்கள் இலங்கை பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் இந்தியா 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய வீரர் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 66 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இலங்கைக்கு 372 ரன்கள் வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது. இலங்கை தரப்பில் பெர்னான்டோ அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை வெற்றிபெற இந்தியா 372 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதையடுத்து, 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன்படி, 4ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் டி சில்வா 31 ரன்களுடனும், தனுஷா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இப்போட்டியில் நாளை ஒருநாள் எஞ்சியுள்ள நிலையில் வெற்றி முனைப்பில் இந்தியா உள்ளது. இன்னும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்பதால் நாளைய ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்த இந்தியா முயற்சிக்கும்.
அதேவேளை, கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ள நிலையில் நாளை முழுவதும் களத்தில் நின்று போட்டியை டிரா செய்ய இலங்கை முயற்சிக்கலாம். அதேவேளை, நாளை மழை பெய்யும் பட்சத்திலும் ஆட்டம் டிரா ஆக வாய்ப்பு உள்ளது. இதனால், முதல் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டமான நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.