டாக்கா,
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்சில் 272 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் ஷட்மன் இஸ்லாம் சிறப்பாக விளையாடி 234 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். தவ்ஹித் ஹிருதோய் 42 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் ஜான் கேம்ப்பெல் 54 ரன்களும், டேக்நரேன் சந்தர்பால் 56 ரன்களும் எடுத்தனர். ஜஸ்டின் கிரீவ்ஸ் 46 ரன்கள் சேர்த்தார். இதனால் வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 27 ரன்கள் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து 27 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய வங்காளதேச அணி, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் அந்த அணி 48.4 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 170 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எளிய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களான பிராண்டன் கிங், ஜான் கேம்ப்பெல் சிறப்பாக விளையாடினர். அரைசதத்தை நெருங்கிய ஜான் கேம்ப்பெல் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் நிதானமாக விளையாடிய பிராண்டன் கிங் அரைசதம் கடந்து 81 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். காவெம் ஹோட்ஜ் 31 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 35.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.