டர்பன்,
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தனது டெஸ்ட் வரலாற்றிலேயே மிகவும் வயதான பிளேயிங் லெவனை களம் இறக்கி புதிய வரலாறு படைத்துள்ளது.
டர்பனில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் விளையாடிய அனைத்து 11 வீரர்களின் வயதும் 30 அல்லது அதற்கு மேல் ஆகும். ஆஸ்திரேலிய டெஸ்ட் வரலாற்றில் 149 ஆண்டுகளில் பிளேயிங் லெவனில் 30 வயதுக்கு கீழ் உள்ள ஒரு வீரர்கூட இடம்பெறாமல் இருப்பது இதுவே முதல்முறையாகும்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அனுபவமிக்க வீரர்களுக்கு மட்டுமே அதிகளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அணியில் இடம்பெற்றுள்ள 11 வீரர்களில் 5 பேரின் வயது 35-க்கு மேல் உள்ளது. சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான் (38) அணியின் மூத்த வீரராக உள்ளார். இவர்களுடன் ஸ்டீவ் ஸ்மித் (37), மிட்செல் ஸ்டார்க் (36), அலெக்ஸ் கேரி (35) மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் (35) போன்ற முன்னணி வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். அணியில் மிகக் குறைந்த வயதாக மேத்யூ ரென்ஷாவுக்கு 30 வயதாகிறது.
டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சைச் சமாளிக்க திணறியது. ககிசோ ரபாடா இல்லாத நிலையிலும், அன்ரிச் நோர்ட்ஜே மற்றும் மார்கோ யான்சென் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொண்டு முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களுடன் போராடி வருகிறது.