கிரிக்கெட்

வீரர்களின் உடற்தகுதி மிகவும் முக்கியமானது: இங்கிலாந்து கேப்டன்

உடற்தகுதி மற்றும் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இங்கிலாந்து அணி தற்போதே தனது தயாரிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டன் ஹாரி புரூக், உலகக்கோப்பை தொடரில் சிறப்பாகச் செயல்பட வீரர்களின் உடற்தகுதி மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ள உலகக்கோப்பைக்கு முன்னதாக, அணியின் உடற்தகுதி மற்றும் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

உடற்தகுதி

சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்ற ஒருநாள் முத்தரப்பு தொடரில் இங்கிலாந்து அணி எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. அந்தத் தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றது. இதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்தது.

ஹாரி புரூக்

இதுகுறித்து பேசிய அவர், "நீங்கள் வெற்றி பெறுவீர்களா அல்லது தோல்வியடைவீர்களா என்பதை எப்போதும் உறுதியாகக் கூற முடியாது. ஆனால், களத்திற்கு வெளியே மேற்கொள்ளும் தயாரிப்புகளை நம்மால் சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியும். அது போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு பெரிதும் உதவும். உலகக்கோப்பைக்கு இன்னும் 12 மாதங்கள் உள்ள நிலையில், நமது திறமைகளை மேம்படுத்தவும், முந்தைய போட்டிகளில் கிடைத்த அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவும் இது சரியான காலகட்டம்" என்று தெரிவித்துள்ளார்.மேலும், "உலகின் மிகவும் உடற்தகுதி மற்றும் வலிமை கொண்ட அணிகளில் ஒன்றாக இங்கிலாந்து உருவாக வேண்டும் என்பதே முக்கிய இலக்கு. அதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் அனைத்து அணிகளுக்கும் சவால் அளித்து ஆதிக்கம் செலுத்த முடியும்" என்றும் புரூக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT