கிரிக்கெட்

20 ஓவர் போட்டிக்கு தேர்வாகாததால் விரக்தி: கிரிக்கெட் வீராங்கனை தூக்குப்போட்டு தற்கொலை

புதுவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்துவந்த கிரிக்கெட் வீராங்கனை, கைப்பட எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

புதுச்சேரி,

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் காஷ்மீர்குமார். இவர் சென்னையில் ஜி.எஸ்.டி. கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகள் ஏஞ்சல் கங்கவாணி (வயது 19), புதுவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக கதிர்காமத்தில் உள்ள துரைராஜ் என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தார்.

கிரிக்கெட்டின் மீது ஆர்வமுள்ள இவர் கனகன் ஏரி அருகே உள்ள ஒரு அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார். இவருக்கு கதிர்வேல் என்பவர் பயிற்சியாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட 20 ஓவர் போட்டிக்கான வீராங்கனைகள் பட்டியலில் ஏஞ்சல் கங்கவாணி இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. அதில் இருந்து அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது கைப்பட எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், 'என் வாழ்க்கை இவ்வளவு நாள் தான் என்பது கடவுள் எழுதி வைத்தது. என் மரணத்திற்கு நான் தான் காரணம். வேறு யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை. அம்மா. அப்பா மிஸ் யூ' என ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தார்.

அவர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு தேர்வாகாத விரக்தியில்தான் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பெற்றோர் தன்னுடன் இல்லையே என்ற வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.