கிரிக்கெட்

அஸ்வின், ஹர்பஜனை முந்திய மானவ் சுதார்... இலங்கை மண்ணில் புதிய சாதனை

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

காலே,

இலங்கைக்கு எதிரான முதல் காலே டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் இளம் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மானவ் சுதார் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இலங்கை மண்ணில் 3-வது இந்தியர்

இந்த போட்டியில் மானவ் சுதார் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன் மூலம் இலங்கை மண்ணில் ஒரே டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை மானவ் சுதார் பெற்றுள்ளார்.

10 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர்கள்

மானவ் சுதார்: 10/131 (4/76, 6/55) - காலே, 2026

ஹர்பஜன் சிங்: 10/153 - காலே, 2008

ரவிச்சந்திரன் அஸ்வின்: 10/160 - காலே, 2015

முதல் இன்னிங்ஸில் இந்தியா முன்னிலை

இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 462 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. படிக்கல் 167 ரன்களும், கே.எல். ராகுல் 82 ரன்களும், துருவ்ஜுரெல் 51 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சோனல் தினுஷா 100 ரன்களும், நிரோஷன் டிக்வெல்லா 80 ரன்களும் எடுத்தனர். இதனால் இந்திய அணி 178 ரன்கள் முன்னிலை பெற்றது.

165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரிஷப் பந்த் 66 ரன்களும், தேவ்தத் படிக்கல் 44 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் இலங்கை அணிக்கு 372 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இலங்கை அணி 206 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சோனல் தினுஷா 84 ரன்களும், தனஞ்சய டி சில்வா 59 ரன்களும் எடுத்தனர்.

இதன் மூலம் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.