புதுடெல்லி,
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் தற்போது 'சூப்பர்8' சுற்று நடைபெற்று வருகிறது. சூப்பர் சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் படுதோல்வியடைந்தது.இதனால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது.
இந்த நிலையில் இந்திய வீரர்களுக்கு முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார். அவர் கூறியதாவது,
இந்திய அணி. ஆமதாபாத்தில் உள்ள சீதோஷ்ண நிலைமைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளவில்லை. அதே சமயம் தென்ஆப்பிரிக்க அணி ஏற்கனவே இங்கு 3 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறது. அதனால் இங்குள்ள சூழலை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
முதல் ஓவரிலேயே அடித்து ஆட முடியாது. முதல் 2 விக்கெட் விழுந்ததும் நமது அணியினர் அழுத்தத்திற்குள்ளானார்கள். சில நேரங்களில் நீங்கள் சாதுர்யமாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும். ஆனால் இந்தியா தனது அணுகுமுறையை மாற்றவில்லை.
அதீத தன்னம்பிக்கையுடன் களம் கண்ட அவர்கள் ஒவ்வொரு பந்தையும் அடிக்க முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தனர். தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் எப்படி பேட் செய்தார்கள் என்பதை இந்தியா கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஒவ்வொரு பந்தையும் பவுண்டரிக்கு அடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் வந்து ஆட்டமிழந்தனர். டி20 கிரிக்கெட்டை அப்படி விளையாடக்கூடாது. எதிரணி வீரர்களிடம் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும். இது போன்ற சவாலான ஆடுகளத்தில் அவர் களால் ரன் குவிக்க முடிகிறது என்றால், நாமும் நமது கெத்தை விட்டு விட்டு அதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
திலக் வர்மா புத்திசாலித்தமான வீரர். ஆனால் அவர் ஆடிய விதம் மிக வும் ஏமாற்றம் அளித்தது. மறுமுனையில் 3 டக்-அவுட்டுக்கு பிறகு ரன் கணக்கை தொடங்கிய அபிஷேக் ஷர்மா நின்றதால் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி முதல் 6 ஓவர்களை தாண்டி செல்ல வேண்டிய பொறுப்பு திலக் வர்மாவுக்கு இருந்தது. அதை செய்ய தவறிவிட்டார். பவர்-பிளேயில் எப்போதும் 70 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என நினைக்கக் கூடாது. 55-60 ரன்கள் எடுத்தால் கூட அது நல்ல தொடக்கம் தான். ஆனால் இந்திய வீரர்களின் பொறுப்பற்ற பேட்டிங் தோல்விக்கு வழிவ குத்து விட்டது.என தெரிவித்தார்.