புதுடெல்லி,
2018-ம் ஆண்டு பந்து சேதப்படுத்தல் சர்ச்சை தொடர்பாக 2021-ல் கேமரூன் பேன்கிராப்ட் தெரிவித்த கருத்துகள், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காததற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டை ஆஸ்திரேலியத் தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி மறுத்துள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டபோதும், டெஸ்ட் அணியில் மீண்டும் ஏன் இடம் கிடைக்கவில்லை என்று தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் பேன்கிராப்ட் கேள்வி எழுப்பியிருந்தார்.
2018-ம் ஆண்டு கேப் டவுன் பந்து சேதப்படுத்தல் சர்ச்சை தொடர்பாக 2021-ல் தெரிவித்த கருத்துகள், தேசிய அணிக்கு திரும்பும் வாய்ப்பை பாதித்திருக்குமா என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்த ஜார்ஜ் பெய்லி, பேன்கிராப்டின் கருத்துகள் தேர்வுக் குழுவின் விவாதங்களில் ஒருபோதும் இடம்பெறவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பேன்கிராப்டிடம் பலமுறை விளக்கம் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து, நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற உள்ள நிலையில், 2018-ம் ஆண்டு சர்ச்சை மீண்டும் பேசப்படுவது அணியின் கவனத்தை பாதிக்குமா என்ற கேள்விக்கும் பெய்லி பதிலளித்துள்ளார்.
இந்த விவகாரம் வீரர்களைப் பாதிக்குமா என்பது தனக்கு தெரியாது என்றும், பெர்த் டெஸ்டுக்கு தயாராவதிலேயே வீரர்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்கத் தொடரில் அடைந்த ஏமாற்றத்திலிருந்து மீண்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பாதைக்குத் திரும்புவதே தற்போதைய முக்கிய இலக்கு என்றும் பெய்லி கூறியுள்ளார்.