கிரிக்கெட்

வார்னர், சச்சின் வரிசையில் இணைந்து புதிய சாதனை படைத்த கில்

மும்பை அணிக்காக சச்சின் 2010 (618 ரன்கள்), 2011 (553 ரன்கள்) ஆகிய ஆண்டுகளிலும், பெங்களூரு அணிக்காக கோலி 2015 (557 ரன்கள்), 2016 (973 ரன்கள்) ஆகிய ஆண்டுகளிலும் 500-க்கும் கூடுதலான ரன்களை எடுத்துள்ளனர்.

கொல்கத்தா

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில், ஒரு கேப்டனாக ஐ.பி.எல். சீசனில் 500-க்கும் கூடுதலான ரன்களை எடுத்த டேவிட் வார்னர், விராட் கோலி மற்றும் சச்சின் தெண்டுல்கர் போன்றோரின் வரிசையில் இணைந்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது, 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 49 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்த அவர், இந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடி 552 ரன்களை சேர்த்துள்ளார்.

அவருடைய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சாய் சுதர்சனை (12 இன்னிங்ஸ்களில் 554 ரன்கள், ஒரு சதம் மற்றும் 6 அரை சதங்கள்) விட 3 ரன்கள் பின்தங்கி, அதிக ரன்கள் குவித்தவர்களின் வரிசையில் 2-ம் இடத்தில் உள்ளார்.

ஒரு கேப்டனாக 2-வது முறையாக அவர் 500-க்கும் கூடுதலான ரன்களை எடுத்துள்ளார். கடந்த ஆண்டு போட்டியின்போது, 15 இன்னிங்ஸ்களில் விளையாடி 650 ரன்களை எடுத்த அவர், அந்த சீசனின் 4-வது அதிக ரன் சேர்த்தவராக அறியப்பட்டார்.

இந்த வரிசையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வார்னர் 2016 முதல் 2018 வரையிலான 3 ஆண்டுகளில் முறையே 848, 641, 692 ரன்கள் எடுத்துள்ளார். கே.எல். ராகுல் பஞ்சாப் அணிக்காக 2020 (670 ரன்கள்) மற்றும் 2021 (626 ரன்கள்) ஆண்டுகளிலும், லக்னோ அணிக்காக (616 ரன்கள்) 2022-ம் ஆண்டிலும் ஒரு கேப்டனாக 500-க்கும் கூடுதலான ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார்.

மும்பை அணிக்காக சச்சின் 2010 (618 ரன்கள்), 2011 (553 ரன்கள்) ஆகிய ஆண்டுகளிலும், பெங்களூரு அணிக்காக கோலி 2015 (557 ரன்கள்), 2016 (973 ரன்கள்) ஆகிய ஆண்டுகளிலும் 500-க்கும் கூடுதலான ரன்களை எடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT